< Back
மாநில செய்திகள்
பெட்ரோல் விற்பனை நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பெட்ரோல் விற்பனை நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

தினத்தந்தி
|
22 Oct 2023 12:17 AM IST

ஆலங்குடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

தகராறு

ஆலங்குடி-புதுக்கோட்டை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு கடந்த 17-ந் தேதி இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் கற்பக வடிவேல், அவரது டீசல் காருக்கு டீசல் நிரப்புவதற்காக வந்துள்ளார். அப்போது, அவர் தனது டீசல் காரை டீசல் பம்பில் நிறுத்தாமல் பெட்ரோல் போடும் பம்பில் நிறுத்தி விட்டு ரூ.500-க்கு போடுமாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர் எதுவும் கேட்காமல் பெட்ரோலை காரில் நிரப்பி உள்ளார். மேலும் டீசல் காரில், பெட்ரோல் நிரப்பியதால் கார் பழுதாகி விடும் என்று கூறி ஊழியர் ஜெகதீசனிடம், கற்பக வடிவேல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் கற்பகவடிவேல் அவரது காரை பெட்ரோல் விற்பனை நிலையத்திலேேய நிறுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

முற்றுகை

இதையடுத்து நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் 20-க்கும் மேற்பட்டவர்களுடன் வந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டார். பின்னர் பேரிக் கார்டுகள் வைத்து பெட்ரோல் விற்பனை நிலைய பாதையை அடைத்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடம்பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கற்பக வடிவேல் தனது டீசல் காருக்கு பெட்ரோல் நிரப்பியதால் கார் பழுதாகி விட்டது, இதனால் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தனக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து கற்பக வடிவேல் பின்னர் பேசி கொள்கிறோம் என்று கூறிவிட்டு காரை அங்கேயே நிறுத்தி விட்டு ஆதரவாளர்களுடன் சென்று விட்டனர்.

புகார்

கார் பழுதாகியதால் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், பெட்ரோல் விற்பனை நிலையத்தை அடித்து நொறுக்கி விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்த கற்பக வடிவேல் மீது ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தங்கராஜ் மனைவி வெண்ணிலா புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்