திருநெல்வேலி
இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம்
|நெல்லையில் இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நெல்லை டவுனில் இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமை தாங்கி கொடியேற்றினார். நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன், பாலாமடை தொழில் அதிபர் அங்கப்பதேவர், கோவில்பட்டி தொழில் அதிபர் பரமேஸ்வரன், பா.ஜ.க. மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
மாநில அமைப்பாளர் பக்தன், இணை அமைப்பாளர்கள் பொன்னையா, குருகுலம் ராஜேஷ், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், பரமேஸ்வரன், அரசுராஜா, கிஷோர்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர்கள் குற்றாலநாதன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோவில்களில் ஏழைகளை பாதிக்கும் வகையில் 'பிரேக்' கட்டண தரிசன முறையை கொண்டு வரக்கூடாது. கோவில் வருமானத்தை கோவிலில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். ஆறுகளை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சியான பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கொண்டு வரப்பட்ட நதிநீர் இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை வருகிற மழைக்காலத்துக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும். பாபநாசம் கோவிலுக்கு பின்புறம் பக்தர்கள் செல்வதை தடுக்கும் வகையில் கேட் அமைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.