< Back
மாநில செய்திகள்
மலை வாழ் மக்கள் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்
திருப்பூர்
மாநில செய்திகள்

மலை வாழ் மக்கள் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்

தினத்தந்தி
|
11 Jun 2022 11:11 PM IST

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மலை வாழ் மக்கள் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

தளி

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மலை வாழ் மக்கள் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

தொழில்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள பொருப்பாறு, கோடந்தூர், ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி, மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, கருமுட்டி, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி, திருமூர்த்திமலை, பூச்சகொட்டாம்பாறை, உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். வனப்பகுதியில் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

ஆனால் சமதளப் பரப்பு போன்று விவசாயம் செய்வது எளிதான காரியம் அல்ல. மேடும் பள்ளமுமான பகுதியை இரவு பகல் பாராது குழுவாக இணைந்து கடின உழைப்பின் மூலம் பாறைகளை அகற்றி சமன் செய்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து ஆறுகளில் இருந்து குழாய் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். அதன் பின்பே சாகுபடி பணிகளை தொடங்க முடியும். தெளிப்புநீர் பாசனத்தின் மூலம் தக்காளி, பீன்ஸ், இஞ்சி, மஞ்சள், பூண்டு, குருமிளகு, வாழை, தென்னை, நெல், மரவள்ளி, எலுமிச்சை உள்ளிட்டவை இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. அத்துடன் வடுமாங்காய், கலாக்காய், கடுக்காய், இலந்தைப்பழம், சாம்பிரானி, தேன் உள்ளிட்டவை இயற்கையாகவே விளைகிறது. அதுதவிர ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு, தைலம் காய்ச்சி விற்பனை செய்தல் உள்ளிட்ட சுயதொழிலும் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நிறைவேறாத அடிப்படை வசதி

அபரிதமான மலையும் கடும் வறட்சியை அளிக்கும் கோடை வெப்பமும், தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளும் அழிக்கவே முடியாத அபார ஆற்றல் கொண்ட பார்த்தீனியம் செடிகள், சீமை கருவேலான் மரங்களும் விவசாயத்தின் எதிரியாக திகழ்ந்து வருகிறது. விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்துள்ள சூழலிலும் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற மலைவாழ்மக்களுக்கு பாதை, மின்சாரவசதி, தகவல் தொடர்பு பண்டைய காலம் போன்றே கிடைக்காமல் உள்ளது.

இதனால் வனவிலங்குகளின் தாக்குதல், விபத்தில் சிக்கும் நபர்கள், பிரசவத்திற்கு தயாராகும் பெண்களை தொட்டில் கட்டி ஒற்றையடிப்பாதையில் சுமந்து வந்து அடிவாரத்தை அடைந்து பின்பு மோட்டார் சைக்கிளில் சென்று வாகனத்தை பிடித்து வந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. உயிரை காக்கும் பொன் போன்ற நிமிடங்கள் வாகனத்தை பிடிப்பதற்கு முன்பே செலவாகி விடுவதால் சிகிச்சை பெறுவதற்குள் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுகிறது. பாதை மற்றும் தகவல்தொடர்பு வசதி முழுமையாக இல்லாததை சாதகமாகக் கொண்டு அங்கு விளைகின்ற பொருட்களை இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கி சென்று விடுகின்றனர்.

உழைப்பை கொட்டி உயிரை பணையம் வைத்து இரவு பகலாக கண்விழித்து பாதுகாத்து பொருட்களை விளைவிக்கின்ற மலைவாழ ்மக்களுக்கு ஏமாற்றம் நஷ்டமுமே மிஞ்சுகின்றது. அதுமட்டுமின்றி எந்த ஒரு துக்க நிகழ்வனாலும் சுய நிகழ்வானாலும் அதை அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்ற உறவினர்களுக்கு தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

எட்டாக்கனியாக கல்வி

இதற்காக வனப்பகுதிக்குள் பயணம் மேற்கொள்ளும் போது வனவிலங்குகளுடன் மோதல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் உடல் ஊனத்திற்கும் உயிரிழப்புக்கும் சம்மந்தபட்டவரின் குடும்பத்தினர் பாதிப்பு அடைகின்றனர். ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசிய அடிப்படை உரிமை கல்வியாகும். தனிநபர், சமுதாய மற்றும் குடும்ப வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ள கல்வி வனப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தடையாகவே உள்ளது. சீரமைக்கப்படாத பள்ளிக்கூடம், கல்விக்காக அடர்ந்த வனப்பகுதியில் பயணித்தல், குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற காரணங்களால் கல்வியில் மேம்பாடு அடைய முடியவில்லை.

இதனால் மலைவாழ் மக்கள் இன்றளவும் படிப்பறிவற்ற பாமர மக்களாகவே உள்ளனர். வனப்பகுதிக்குள் ஏட்டளவில் எழுத்தளவில் உள்ள கல்வியை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் கொடுத்து உதவ வேண்டியது அதிகாரிகள் கடமையாகும். கல்வியில் மேம்பாடு அடைந்தால் மலைவாழ் மக்கள் வறுமையை ஒழித்து வளமிக்க வாழ்வாதாரத்தை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.

மேம்படுத்த வேண்டும்

வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் உற்பத்தியாகி ஓடி வருகின்ற ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல் உள்ளிட்ட அமராவதி வனச்சரக மலை கிராமங்கள் தனி தீவாக மாறி மலைவாழ் மக்கள் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பெற முடியாத சூழல் தொடர்கதையாக உள்ளது.

அதுமட்டுமின்றி ஆதார், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் சாதிச்சான்றிதழ் அளிக்கவும் மலையடிவாரப் பகுதியில் முகாம் அமைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதேபோன்று வனப்பகுதியில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் மலைவாழ் மக்களுக்கு மானிய விலையில் விதைகள் பாசனத்திற்கு தேவையான உபகரணங்கள் அளிப்பதற்கு வேளாண்மைத்துறை முன்வரவேண்டும். வனப்பகுதியில் இயற்கை முறையில் விளைகின்ற மற்றும் விளைவிக்கப்பட்ட பொருட்களை மலைவாழ் மக்கள் சந்தைப்படுத்துவதற்கு அதிகாரிகள் உதவ வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிதாக கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதற்கும் பாதை வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் பாதையை வசதியை ஏற்படுத்திக்கொடுத்து மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் உயரந்து அடுத்தவர் உதவியை எதிர்பாராது தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை ஆதாரமான கல்வி சுயதொழில் மூலம் பொருளாதார வசதியை மேம்படுத்தி தர வேண்டும்.


Related Tags :
மேலும் செய்திகள்