< Back
மாநில செய்திகள்
ஹிஜாவு மோசடி நிதி நிறுவன பெண் இயக்குனர் கணவருடன் கைது
மாநில செய்திகள்

'ஹிஜாவு' மோசடி நிதி நிறுவன பெண் இயக்குனர் கணவருடன் கைது

தினத்தந்தி
|
1 April 2023 9:39 PM GMT

89 ஆயிரம் பேரிடம் ரூ.4,400 கோடி சுருட்டிய வழக்கில் ஹிஜாவு மோசடி நிதி நிறுவனத்தின் மேலும் ஒரு பெண் இயக்குனர் கைது செய்யப்பட்டார். மோசடியில் முக்கிய பங்கு வகித்த அவரது கணவரும் சிக்கினார்.

நிதி நிறுவன மோசடி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வந்த 'ஹிஜாவு' நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்துக்கு 15 சதவீதம் வட்டித்தொகை தருவதாக பொதுமக்களிடையே கவர்ச்சி விளம்பரங்களை வெளியிட்டது. இதனை நம்பி முதலீடு செய்த 89 ஆயிரம் பேரிடம் ரூ.4 ஆயிரத்து 400 கோடி வரை இந்த நிறுவனம் மோசடி செய்தது. பணத்தை இழந்தவர்கள் சென்னை அசோக்நகரில் இயங்கி வரும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார்கள் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஹிஜாவு நிறுவனம் மற்றும் 19 துணை நிறுவனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், தலைவர், துணை நிறுவனத்தின் இயக்குனர்கள், கமிட்டி உறுப்பினர்கள், ஏஜெண்டுகள், அலுவலக பணியாளர்கள் என 31 பேர் மீது வழக்கு பாய்ந்தது. இதில் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலாண்மை இயக்குனர் அலெக்சாண்டர், அவரது மனைவியும், மற்றொரு இயக்குனருமான மகாலட்சுமி உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் 2 பேர் கைது

இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வி மற்றும் அவரது கணவரும், மேலாண்மை இயக்குனர் அலெக்சாண்டரிடம் நெருக்கமாக இருந்த நிர்வாகியுமான ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில் ரவிச்சந்திரன் தனது பெயரிலேயே சென்னை அண்ணாநகர் மேற்கில் துணை நிறுவனத்தை நடத்தி ரூ.300 கோடி வரை முதலீடு பெற்று ஹிஜாவு நிறுவனத்துக்கு அனுப்பி உள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த பெரும் கமிஷன் தொகையில் 2 சொகுசு கார்கள் வாங்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரூ.5 கோடியிலும், ரூ.2 கோடியில் தேவக்கோட்டையில் நிலம் மற்றும் காரைக்குடியில் வீடு கட்டி உள்ளனர். அதற்கான ஆவணங்களை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விரைவில் புகார் அளியுங்கள்

இந்த மோசடி வழக்கு தொடர்பாக 13 ஆயிரம் புகார் மனுக்கள் மட்டுமே வந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் விரைவில் தங்களது புகார் மனுவை அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்