18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவு
|நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி பொறியியல் கல்லூரி செமஸ்டர் முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலை.க்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
அண்ணா பல்கலை.க்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று சில பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் கீழ்க்கண்ட காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.
1) விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து, ஒத்துழைப்பு அளிக்காதது
2) ஏற்கனவே 4 பருவத் தேர்வுகளுக்காக பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முன்பணத்திற்கு சரியாக கணக்கு தராதது
தற்போது மாணாக்கர்களின் நலன் கருதி இன்றே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்ற உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மேற்கண்ட 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும்.
கல்லூரிகள் செய்த தவறுக்கு அக்கல்லூரிகளின் மீது அண்ணா பல்கலைக்கழகத்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.