பெரம்பலூர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் பயிற்சி வகுப்பு
|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான விழுதுகளை வேர்களாக்க என்ற தலைப்பின் கீழ் சிறப்பு உயர் கல்வி வழிகாட்டும் பயிற்சி வகுப்பு பெரம்பலூரில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசுகையில், ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. எண்ணும் எழுத்தும் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் என பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேரும்போது தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் சத்தியமூர்த்தி, மக்கள் மறு மலர்ச்சித் திட்டம் (எம்.எம்.டி.) ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கதிரவன், முகமது யாக்யா, ஆதிதிராவிடர் நல அலுவலர்கள், விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள், ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் விடுதி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.