நாமக்கல்
நாமக்கல்லில், நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்
|நாமக்கல்லில், நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 2022-2023-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தாம் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் உயர்கல்வி படிப்புகள் தொடர வேண்டும் என்கிற நோக்கில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக நான் முதல்வன் - 'உயர்வுக்குபடி' என்ற முகாமானது நாளை (திங்கட்கிழமை) நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் 1,493 மாணவர்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமானது வருவாய்த்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக அலுவலகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, முன்னோடி வங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக்கல்விதுறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாமில் தனியார் கல்லூரிகளும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைக்க உள்ளன.
எனவே மாணவர்கள் தங்கள் உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.