தேனி
அரசு கல்லூரிகள் இல்லாததால் ஏழைகளுக்கு எட்டாக்கனியான உயர்கல்வி
|கம்பம், கடமலைக்குண்டு பகுதிகளில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உயர்கல்வி இருப்பதால் அப்பகுதிகளில் அரசு கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உயர்கல்வி கனவு
பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறோம்? என்ற கனவு இருக்கும். டாக்டர் ஆக வேண்டும், என்ஜினீயர் ஆக வேண்டும், போலீஸ் அதிகாரி, அரசு ஊழியர், ஆசிரியர், தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது போன்ற பலவித கனவுகளை சுமந்தே பள்ளிக்கு வருகின்றனர்.
எல்லோரும் தங்களின் கனவுகளை நோக்கி பயணிக்கிறார்களா? அவர்களின் கனவுகளை நோக்கிய பயணத்தில் உள்ள தடைகளை தகர்க்கும் வலிமையோடு இருக்கிறார்களா? அவர்களுக்கான உயர் கல்வி கனவுகள் எளிதில் கைகூடுகிறதா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
ஏழ்மையும், அறியாமையும் கனவுகளை அழித்து விடக்கூடாது என்பார்கள். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 வரை படிப்பதற்கு அரசு பள்ளிகள் பெரும் உதவியாக இருக்கின்றன. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வறுமையும், தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் போதிய எண்ணிக்கையில் அரசு கல்லூரி வசதி இல்லாததும் பெரும் தடையாக இருக்கிறது. அப்படிப்பட்ட தடைகளையும் தகர்த்து நீண்ட தூரம் பயணம் செய்து கல்லூரி படிப்பை தொடர்வதே பலருக்கு சாதனையாகிறது.
தமிழகத்தின் சராசரி
தேசிய அளவில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் சராசரியை விடவும், தமிழ்நாட்டின் சராசரி அதிகம். தேசிய சராசரி 28 சதவீதம் என்ற அளவில் உள்ள நிலையில், தமிழகத்தின் சராசரி 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
இந்த சராசரியை இன்னும் அதிகரிக்க தமிழக அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் உயர்கல்வித்துறை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் பல உள்ளன. அதில் முக்கியமாக, மாணவர்கள் வசிப்பிடங்களில் இருந்து உயர்கல்விக்காக அதிக தூரம் பயணிக்க வேண்டிய பகுதிகளை கண்டறிந்து கூடுதல் கல்லூரிகளை திறக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உயர்கல்வி கனவுகளோடு, வறுமையையும் சுமந்து கொண்டு நீண்ட தூரம் பயணித்து கல்வி பயிலும் நிலையில் ஏராளமான மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். அதுபோல், பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டு உயர் கல்வி கனவுகளை கைவிட்டுவிட்டு வறுமையை துரத்திட கூலி வேலைகளுக்கு சென்று கொண்டு இருப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர்.
கம்பம், கடமலைக்குண்டு
தேனி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், இங்கு விவசாயம் மற்றும் விவசாய கூலித்தொழிலை சார்ந்தே லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அதுபோன்ற ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகளை சார்ந்தே இருக்கின்றனர். அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காவிட்டால், தனியார் கல்லூரிகளுக்கு சென்று கட்டணம் கட்ட முடியாத சூழலில் கனவுகளை கைவிட்டு விடுகின்றனர்.
மாவட்டத்தில் போடியில் அரசு பொறியியல் கல்லூரி, க.விலக்கில் அரசு மருத்துவ கல்லூரி, ஆண்டிப்பட்டி, வீரபாண்டி, கோட்டூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோட்டூர், தேக்கம்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வீரபாண்டி, ஆண்டிப்பட்டி, தேனியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தப்புக்குண்டுவில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளத்தில் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டியில் அரசு சட்டக்கல்லூரி ஆகியவை உள்ளன.
4 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தேனி மாவட்டத்தில், கம்பம் சட்டமன்ற தொகுதியில் எந்த ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. பெரியகுளம் தொகுதியில் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் தேனியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மட்டுமே உள்ளது. ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியத்திலும் எந்த ஒரு அரசு கல்லூரியும் கிடையாது.
இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
வெளி மாவட்டங்களில் தங்கி படிப்பு
கடமலைக்குண்டுவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஹரன் கூறும்போது, 'நான் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படிக்கிறேன். கடமலைக்குண்டு பகுதியில் உயர்கல்விக்கு எந்த வசதியும் இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி, கலைக் கல்லூரி எது செல்ல வேண்டும் என்றாலும் 30 முதல் 45 கி.மீ. பயணம் செய்ய வேண்டியது உள்ளது. அவ்வாறு என்றாலும் கல்லூரிகளில் இடம் கிடைப்பது இல்லை. இதனால், வெளி மாவட்டங்களில் விடுதிகளில் தங்கி படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கு அதிகம் செலவாகிறது. கடமலைக்குண்டுவை மையப்படுத்தி ஏதாவது ஒரு அரசு கல்லூரி தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.
கம்பத்தை சேர்ந்த எம்.ஏ. பட்டதாரி சேக்பரீத் கூறும்போது, 'நான் கோவையில் தங்கி கல்லூரி படிப்பை மேற்கொண்டேன். கம்பம் சட்டமன்ற தொகுதியில் எந்த ஒரு அரசு கல்லூரியும் இதுவரை தொடங்கப்படவில்லை. கம்பம், உத்தமபாளையம் ஒன்றியங்களில் 12 உயர்நிலைப் பள்ளிகள், 41 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கு வழியின்றி உள்ளனர். அவர்களால் தனியார் கல்லூரிகளில் அதிக செலவு செய்து படிக்க முடியாது. கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கினால் ஏராளமான மாணவ, மாணவிகளின் உயர்கல்வி கனவு நிறைவேறும்.'என்றார்.
கனவாகவே இருக்கிறது
கடமலைக்குண்டுவை சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் ருத்ரன் கூறும்போது, 'நான் கோவையில் தங்கி எம்.எஸ்சி. படித்து வருகிறேன். கடமலை-மயிலை ஒன்றியம் பின்தங்கிய கிராமப்புற பகுதிகள் நிரம்பியவை. இங்கு ஒரு பேரூராட்சி கூட கிடையாது. அனைத்தும் கிராம ஊராட்சிகள் தான். இந்த ஒன்றியத்தில் 3 உயர்நிலைப்பள்ளிகள், 12 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு இந்த ஒன்றியத்தில் எந்த வசதியும் இல்லை. இதனால், வெளியூர்களில் தங்கி படிக்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனால், பலருக்கும் உயர்கல்வி என்பது கனவாகவே இருக்கிறது' என்றார்.
கடமலைக்குண்டு வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தன் கூறும்போது, 'கடமலைக்குண்டு பகுதியில் ஏதாவது ஒரு அரசு கல்லூரி தொடங்க வேண்டும். இதுதொடர்பாக வியாபாரிகள் சங்கத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த கிராமப்புற மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு படிப்பதற்கு இங்குள்ள மாணவ, மாணவிகள் ஆண்டிப்பட்டி, வீரபாண்டி பகுதிகளில் உள்ள கலைக்கல்லூரிக்கு தான் சென்று வருகின்றனர். அங்கும் போதிய பாடப்பிரிவுகள் இல்லை. இடம் கிடைப்பதும் இல்லை' என்றார்.
அரசு நடவடிக்கை
கூடலூரை சேர்ந்த விவசாயி தாமரைச்செல்வன் கூறும்போது, 'எங்கள் பிள்ளைகளை கல்லூரிகளில் படிக்க வைக்க விரும்புகிறோம். ஆனால், கூடலூர், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் எந்த அரசு கல்லூரியும் இல்லை. கூடலூரில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள வீரபாண்டி அரசு கலைக் கல்லூரி, கோட்டூர் பாலிடெக்னிக் கல்லூரி போன்ற இடங்களில் சேர்க்க வேண்டியது உள்ளது. இதனால் தனியார் கல்லூரிகளில் படிக்க வைக்க வசதி இல்லாத குடும்பங்களில் பலரும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கேரளாவுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகளின் உயர் கல்வியும் பாதிக்கப்படுகிறது. கம்பம் பகுதியில் அரசு கல்லூரி அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.