சிவகங்கை
20 மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு
|தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றனர்.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றனர்.
நான் முதல்வன் திட்டம்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பாக, நான் முதல்வன் திட்ட உதவி மையத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களில் 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடர இயலாத மாணவர்கள் பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி முகாமில் பங்கு பெற்று உயர்கல்வி பயில வழிகாட்டுதலும், நிதியுதவியும் தேவைப்படும் மாணவர்கள் விபரம் மாநில திட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டது.
உதவி மையத்தின் மூலம் இந்த மாணவர்களை தொடர்பு கொண்டு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மேலும், உதவி மையத்தினையும், அரசின் உயர்கல்வி வழிகாட்டிக்கான கட்டணமில்லா தொலைபேசி 14417 எண்ணையும் தொடர்பு கொண்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவியும் மற்றும் பிற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
20 மாணவர்களுக்கு வாய்ப்பு
பொருளாதார வசதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.50,000 கட்டுக்குடிப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி மாணவி கலைவாணிக்கு நீட் மறுதேர்வு எழுதுவதற்கான பயிற்சி மையத்தில் சேர்வதற்கும், அரசு மேல்நிலைப்பள்ளி, கீழடி மாணவன் கண்ணனுக்கு ரூ.8000 கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்கு நிதியுதவி, திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அழகேஸ்வரிக்கு ரூ.16,000 கல்லூரி பயில்வதற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதா லெட்சுமி, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, ஆகியோரது வழிகாட்டுதலில் உயர்கல்வி வழிகாட்டிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஸிமா பேகம் ஏற்பாட்டில் சிவகங்கை ராஜா துரைசிங்கம் கல்லூரியில் 2 மாணவர்களும், அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 13 மாணவ, மாணவிகளும், பூலாங்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் 2 மாணவர்களும், மதுரை வக்பு வாரியக்கல்லூரியில் 1 மாணவனும், பாண்டியன் சரஸ்வதி யாதவ் கலைக்கல்லூரியில் 1 மாணவியும், சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 1 மாணவியும் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.