'15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது, எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டவில்லை' - முதல்-அமைச்சர் பேச்சு
|மறைந்த பிறகும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில் இன்று திறந்து வைத்தார்.
கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் படுக்கை வசதிகளுடன் 4.89 ஏக்கரில் ரூ.240 கோடி மதிப்பில் இந்த பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 51,429 சதுர மீட்டர் பரப்பில் 6 தளங்களுடன் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஒரு செங்கல் கதை உங்கள் எல்லோருக்கும் தெரியும். எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை.
இந்த மருத்துவமனையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், குடல்-இரைப்பை உள்ளிட்ட பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறை அமைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் மருத்துவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. மறைந்த பிறகும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.