திருநெல்வேலி
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
|நெல்லையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் சார்பில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாபுசெல்வன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் சற்குணராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தலைமையிடச் செயலாளர் சுந்தரம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் காந்திராஜா, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பிளசிங்பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முகைதீன்பிள்ளை நன்றி கூறினார்.