அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
|அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்தது மூலமாக அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் அவரது உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், அனுமதியை மீறி 2,64,644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று அவரது கோரிக்கையை மறுத்து விட்டார்.
மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி கவுதம சிகாமணியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.