நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளுக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
|ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை பயன்படுத்த விதித்த தடையை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு மறுத்தது.
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் என் மீது பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை யாரும் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட கருத்துகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அந்த தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு முறையிட்டார்.
இதுதொடர்பாக அவர் வாதிடுகையில், "நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. எனவே விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையானது சட்டசபையில் விவாதிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டு 6 மாதம் கடந்துவிட்டது. இந்த அறிக்கையானது, இனி இவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பதும் ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த விவகாரத்தில் இந்த கோர்ட்டு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும்" என வாதாடினார்.
அதற்கு நீதிபதி, பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டி, இடைக்கால தடையை ரத்து செய்ய மறுத்தார்.
மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார்.
முடிவில், "ஆறுமுகசாமி ஆணையத்தின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஆனால் தனிநபர் குற்றச்சாட்டு மற்றும் வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த கருத்தையும் இந்த கோர்ட்டு தெரிவிக்க விரும்பவில்லை" என நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.