சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
|சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்தது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு மற்றும், விழுப்புரத்தில் தி.மு.க. நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக் கம்பம் நாட்டிய போது 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வழக்கு ஆகியவை இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.
இதனை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விபத்து நடந்த பிறகு விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட, சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பதை தடுப்பது முக்கியமானது என்று தெரிவித்தனர். மேலும் சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.