அரியலூர்
ஏரியில் மூழ்கி அக்காள், தங்கை சாவு
|உடையார்பாளையம் அருகே விடுமுறைக்கு ஊருக்கு வந்த அக்காள், தங்கை ஏரியில் மூழ்கி இறந்தனர்.
சகோதரிகள்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 50). இவர் இந்திய ராணுவத்தில் சபிதார் மேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அட்சயா(17), அபி(15) என 2 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் இருவரும் புனேவில் உள்ள ராணுவ பள்ளியில் அட்சயா பிளஸ்-2, மற்றும் அபி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுமுறையில் தங்களது சொந்த ஊரான ஒக்கநத்தம் கிராமத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முருகானந்தம் தனது குடும்பத்துடன் வந்தார்.
தண்ணீரில் மூழ்கினர்
நேற்று மாலை 4 மணி அளவில் அக்காள், தங்கை இருவரும் அருகில் உள்ள பிலிச்சிக்குழி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் ஏரிக்கு குளிக்க சென்ற மகள்கள் 2 பேரும் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்களின் துணிகள் மற்றும் காலணிகள் மட்டும் ஏரிக்கரையில் கிடந்துள்ளன.
பலி
பின்னர் ஏரியில் இறங்கி பார்த்தபோது அட்சயாவும், அபியும் ஏரியில் மூழ்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர், இவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மாணவிகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அட்சயா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் ஒக்கநத்தம் கிராமே சோகத்தில் மூழ்கியது.