< Back
மாநில செய்திகள்
புற்றீசல் போல் அதிகமாக   உருவாகும் கோழிப்பண்ணைகள்
திருப்பூர்
மாநில செய்திகள்

புற்றீசல் போல் அதிகமாக உருவாகும் கோழிப்பண்ணைகள்

தினத்தந்தி
|
17 July 2022 9:36 PM GMT

தாராபுரம் வட்டார பகுதியில் புற்றீசல் போல் உருவாகும் தனியார் கோழிப்பண்ணைகளை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரம் வட்டார பகுதியில் புற்றீசல் போல் உருவாகும் தனியார் கோழிப்பண்ணைகளை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் கோழிப்பண்ணைகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் ஊராட்சியை சுற்றியுள்ள பகுதியில் கெத்தல்ரேவ், கோவிந்தாபுரம், தும்ப நாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், நஞ்சுண்டாபுரம், காளிபாளையம், புளியமரத்துபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சுற்றி ஏராளமான தனியார் கோழிப்பண்ணைகள் புற்றீசல் போல அதிகமாக உருவாகி உள்ளது. இதில் இருந்து வெளியேறும் ஈ தொல்லை நாளுக்கு நாள் பெருகி பொதுமக்களை பாதிப்படைய செய்து வருகிறது.

மேலும் சின்னப்புத்தூர் கிராமத்தில் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து புளியமரத்து பாளையம் செல்லும் சாலையில் சன் பவுல்டரி பார்மஸ், எஸ்.கே.எம்.சபரீஸ் உள்ளிட்ட ஏராளமான தனியாருக்கு சொந்தமான முட்டைக்கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து ஏராளமான ஈக்கள் வெளியேறி வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் உற்பத்தியாகும் ஈக்கள் அருகிலுள்ள கிராமம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

விதிமுறைகளை மீறி

குறிப்பாக கோழிப்பண்ணை அமைக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்படி குடியிருப்பு பகுதியில் 500 மீட்டர் இடைவெளியிலும், நீர்நிலை, கிணறு போன்றவற்றிற்கு 100 மீட்டர் அப்பாலும், மாநில தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டருக்கு அப்பாலும், பஞ்சாயத்து சாலையில் இருந்து 15 மீட்டருக்கு அப்பாலும் கோழிப்பண்ணைகள் அமைக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு தனியார் கோழிப்பண்ணைகளை நடத்தி வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகளே துணைபோவதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது.

கோழிப்பண்ணையில் இருந்து வரும் ஈக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிம்மதியாக தூங்கவோ, சாப்பிடவோ முடியவில்லை. குறிப்பாக டீ குடிக்க கூட முடியவில்லை. வீடுகளில் எங்கு பார்த்தாலும் ஈக்கள் சூழ்ந்து கொள்கிறது. ஆடு,மாடுகளுக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால் ஈக்கள் விழுந்து செத்து மிதக்கிறது. அந்த தண்ணீரை கால்நடைகள் குடிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே சின்னப்புத்தூர் கிராமத்தைச் சுற்றி அனுமதியின்றி இயங்கும் கோழிப்பண்ணைகளை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்