மதுரை
உக்ரைன் போரால் அகதியானவர்களுக்கு சேவை செய்த தமிழர்
|உக்ரைன் போரால் அகதியானவர்களுக்கு தமிழர் ஒருவர் சேவை செய்தார். மக்களின் இன்னலில் பங்கெடுத்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாக கூறினார்.
மதுரை,
உக்ரைன் போரால் அகதியானவர்களுக்கு தமிழர் ஒருவர் சேவை செய்தார். மக்களின் இன்னலில் பங்கெடுத்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாக கூறினார்.
நூலகர் பணி
சென்னை ராமாவரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். நெடுஞ்சாலைதுறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி மேரி மார்க்ரெட் டயஸ். இவர்களது மகன் டோனி கோவிந்தராஜன் (வயது41). இவர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
அப்போது அங்கு படிக்க வந்த பிரான்சு நாட்டு மாணவி கரோலின் டிரண்டா என்பவருக்கும், டோனி கோவிந்த ராஜனுக்கும் காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் 2013-ம் ஆண்டு சென்னையில் நடந்தது. அதன்பின் இவர்கள் பிரான்சு நாட்டிற்கு சென்று தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்தனர். தற்போது இருவரும் பிரான்சு தலைநகர் பாரீசில் வசித்து வருகின்றனர்.
டோனி கோவிந்தராஜன், அங்குள்ள பாரீஸ்-8 பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட அகதிகள் முகாமில் டோனி கோவிந்தராஜன் சேவை செய்தார். தற்போது அவர் தமிழகம் திரும்பி, தனது மனைவி கரோலினுடன் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது அத்தை திலகம் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அகதிகள் முகாமில் சேவை செய்தது குறித்து டோனி கோவிந்தராஜன் 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-
பிரெஞ்சு மொழி மீது ஏற்பட்ட ஆர்வத்தால் அதனை படித்து பிரான்சு நாட்டு பெண்ணை திருமணம் செய்து தற்போது பாரீஸ் நகரில் குடியிருந்து வருகிறேன்.
போரில் ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டு மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேற தொடங்கினர். அதனை அறிந்து அந்த நாட்டு மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.
அதற்காக போலந்து நாட்டின் பிரெமிசில் அகதிகள் முகாமிற்கு நான் கிளம்பினேன். ஆரம்பத்தில் எனது மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின் அவரை சமாதானம் செய்துவிட்டு நான் முகாமிற்கு கிளம்பி சென்றேன்.
வணிக வளாகம்
போலந்து நாட்டில் உள்ள இந்த முகாம் உக்ரைன் நாட்டின் எல்லை அருகே அமைந்து உள்ளது. உக்ரைனில் இருந்து ஐரோப்பியாவிற்கு வர விரும்புவார்கள் இந்த முகாமிற்குதான் வருவார்கள். இந்த அகதிகள் முகாம் ஒரு மிகப்பெரிய வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு, மக்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த முகாமிற்கு குழந்தைகள், பெண்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் வருவார்கள்.
ஏனென்றால் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் போர் புரிவதற்காக உக்ரைனில் தங்கி விட்டார்கள். இந்த முகாமுக்கு வருபவர்களுக்கு என்னை போல சுமார் 60 பேர் உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஈடு்பட்டோம்.
கடந்த மார்ச் மாதத்தில் அந்த முகாமில் இருந்து மக்களுக்கு சேவை செய்தேன். அதன்பின் போலந்து அரசு பணியாளர்கள், முகாமிற்கு வந்ததால் நான் அங்கிருந்து கிளம்பி மீண்டும் பாரீஸ் வந்து விட்டேன். ஐரோப்பியாவில் உள்ள அனைத்து நாடுகளும் உக்ரைன் நாட்டு மக்களுக்கு தற்காலிக குடியுரிமை விசாக்களை வழங்கியது. போலந்து முகாமிற்கு வந்தவர்கள் தாங்கள் விரும்பும் நாட்டிற்கு சென்று குடியேறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்காரணமாக ஏராளமானோர் பிரெமிசில் அகதிகள் முகாமிற்கு வந்து தங்க வைக்கப்பட்டு, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றனர். போரால் பாதிக்கப்பட்டு தங்களது இருப்பிடத்தை விட்டு அகதிகளாக வரும் மக்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர்களின் இன்னல்களில் பங்கெடுத்து அவர்களது சேவை செய்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.