சென்னை
சென்னையில் 18 இடங்களில் நடந்த சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிறைவு - பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்
|சென்னையில் 18 இடங்களில் நடந்து வந்த சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிறைவடைந்தது. பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.
தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக கடந்த தி.மு.க. ஆட்சியில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா மீண்டும் இந்த ஆண்டு புத்துணர்வோடு நடத்தப்பட்டது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழக நாகரிகம், பண்பாடு மற்றும் நாட்டுப்புற கலைகளை அடையாளப்படுத்தக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'வை சென்னை தீவுத்திடலில் கடந்த 13-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு மைதானம், தியாகராயநகர் மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் ராமகிருஷ்ணாநகர் விளையாட்டு மைதானம், அண்ணாநகர் கோபுரப்பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி.விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம் என மொத்தம் 18 இடங்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கும்பாட்டம், தெருக்கூத்து என தமிழர்களின் பாரம்பரிய கலைகளை 600-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தினந்தோறும் மாலை நேரங்களில் அரங்கேற்றினார்கள். கனிமொழி எம்.பி.யின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை சென்னைவாசிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.
கலைஞர்கள் பிரதிபலித்த கலையின் வடிவத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனார்கள். சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த உணவு திருவிழாவும் களை கட்டியது. நாவில் எச்சில் வரவைக்கும் வகையிலான அறுசுவை உணவு வகைகளை உணவு பிரியர்கள் திகட்டும் அளவுக்கு சுவைத்து மகிழ்ந்தனர்.
கடந்த 14-ந் தேதி முதல் நடைபெற்று வந்த சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவின் கடைசி நாள் நேற்று ஆகும். காணும் பொங்கல் தினமான நேற்று மாலை நேரத்தில் பாரம்பரிய கலைகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்தோடு குவிந்தனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள், தீவுத்திடல், கடற்கரைகள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது. கடல் அலை போன்று திரண்ட பொதுமக்களை பார்த்து, கலைஞர்களும் உற்சாகம் அடைந்தனர்.
கடந்த 4 நாட்கள் நடைபெற்ற சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நேற்று நிறைவடைந்தது. சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு எப்போது மீண்டும் இந்த நிகழ்ச்சி வரும் என்ற ஏக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். பின்னர் பறை இசைத்தல் உள்பட தமிழக பாரம்பரிய கலைகளை செய்து அசத்திய கலைஞர்கள், கனிமொழி உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.