< Back
மாநில செய்திகள்
விவசாயி வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விவசாயி வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை

தினத்தந்தி
|
8 Oct 2023 12:15 AM IST

மேல்மலையனூர் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே ஈயக்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் காசிவேல்(36). விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி வேண்டாவுடன் அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலைக்கு சென்றார்.

பின்னர் வேலை முடிந்து கணவன், மனைவி இருவரும் பிற்பகலில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே வீட்டின் உள்ளே சென்று அறையை பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 16 பவுன் நகைகள், 350 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

தம்பதி இருவரும் வேலைக்கு சென்றதை அறிந்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து காசிவேல் கொடுத்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை,பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஈயக்குணம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்