கள்ளக்குறிச்சி
விவசாயி வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை
|சங்கராபுரம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற விவசாயியின் வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சங்கராபுரம்
விவசாயி
சங்கராபுரம் அருகே உள்ள சவுந்தரவல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 65). விவசாயியான இவர், சம்பவத்தன்று வீ்ட்டை பூட்டி விட்டு அவரது மனைவி சகுந்தலா(60) என்பவருடன் கெங்கவல்லியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்காக சென்றார்.
பின்னர் மறுநாள் மதியம் ஊருக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனடியாக வீட்டின் அறையில் சென்று பார்த்தனர். அப்போது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணி, மணிகள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், ஆடு, மாடு வாங்க வைத்திருந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம், 2 வெளிநாட்டு டார்ச் லைட், 2 வெள்ளி குங்குமச்சிமிழ், வெள்ளி விளக்கு, கோல்ட் கலர் வாட்ச் ஆகியவற்றை காணவில்லை.
மர்ம நபர்கள் கைவரிசை
கோவிந்தராஜ் அவரது மனைவியுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்றதை அறிந்து மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து மேற்கண்ட நகை-பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தொியவந்துள்ளது. கொள்ளை போன நகை-பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோவிந்தராஜ் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் ராஜவேல் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
பரபரப்பு
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் சவுந்தரவல்லிபாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.