கோயம்புத்தூர்
வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல்
|சுற்றுலா வாகனங்கள் வருகை அதிகரித்ததால், வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா வாகனங்கள் வருகை அதிகரித்ததால், வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறை
கோவை மாவட்டம் வால்பாறையானது மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, மிலாது நபி விடுமுறை, வார விடுமுறை, காந்தி ஜெயந்தி விடுமுறை என தொடர் விடுமுறை வந்ததால், கடந்த சில நாட்களாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அவர்கள் கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை, சோலையாறு அணை, நீராறு அணை, சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி உள்பட வால்பாறையின் பல்வேறு இடங்களை குடும்பத்தோடு சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
ஆனால் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று தொடர் விடுமுறை முடிந்ததால், வால்பாறையில் இருந்து சொந்த ஊருக்கு சுற்றுலா பயணிகள் திரும்ப தொடங்கினர். இதனால் காலை 11 மணி முதல் வால்பாறை மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. அதில் ஆம்புலன்ஸ்கள் கூட சிக்கி தவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அவதிப்பட்டனர். இதனால் வால்பாறையில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.