< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்

பலத்த இடி, மின்னலுடன் மதுரை நகரில் இரவில் வெளுத்து வாங்கிய மழை- ஆறாக மாறிய சாலைகள்

தினத்தந்தி
|
12 Oct 2023 6:07 AM IST

மதுரையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறு போல ஓடியது


காலையில் வெயில்

மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. இரவிலும் அதே வெப்பசலனம் காணப்பட்டதால், மதுரை மக்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது. இருப்பினும் மாலை 6 மணி அளவில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதன்படி கருமேகங்கள் ஒன்று திரண்டு இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை சாரல் மழையாக இருந்தது. மீண்டும் இரவு 9 மணிக்கு மேல் பலத்த மழையாக மாறி வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

போக்குவரத்து பாதிப்பு

மதுரை பெரியார் பஸ் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி, கூடல்புதூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், கொட்டும் மழையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்ற காட்சிகளை காணமுடிந்தது. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரமும் தடைபட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது.

கனமழை காரணமாக தெப்பக்குளம் பகுதியில் ஒரு வீட்டில் மழை நீர் புகுந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் கந்தசாமி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் இருந்தவர்களை மீட்டனர். அலங்காநல்லூர், பாலமேடு, மற்றும் அழகர்கோவில் பகுதிகளில் நேற்று மாலையில் மழை பெய்தது.

மேலும் செய்திகள்