திருவாரூர்
திருவாரூரில், கடும் பனிப்பொழிவு
|திருவாரூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திருவாரூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பனிப்பொழிவு
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைப்பட்ட காலமான ஜனவரி, பிப்ரவாி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது.அதன் பின்னர் வளிமண்டல சுழற்சி காரணமாக அடிக்கடி மழையும் பெய்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்.திருவாரூரில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் இதமானதாக இருக்கிறது.ஆனால் நேற்று அதிகாலை திருவாரூரில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருவாரூரில் இருந்து நாகை, தஞ்சை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, தஞ்சை செல்லும் சாலைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது.
முகப்பு விளக்கு
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்தில் சென்றதையும் காண முடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷன நிலையால் வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றது. பனிப்பொழிவு குறையும் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
நோய் பாதிப்பு
மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர்.இந்த ஆண்டு வெயில், மழை, பனிப்பொழிவு என மாறி, மாறி வருவதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.நீடாமங்கலம் பகுதியில் நேற்று பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் அதிகாலையில் பாதசாரிகள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் சிரமப்பட்டனர். கார்கள், வேன்கள், லாரிகள்,பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் பயணத்தை தொடர்ந்தன.நீடாமங்கலம் ெரயில் நிலைய வளாகம் பனிப்பொழிவால் நிரம்பிருந்தது. காலையில் கோவையிலிருந்து வந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயில், மன்னார்குடியிலிருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ெரயில் கடும் பனிமூட்டத்துக்கு இடையே ரெயில் நிலையத்துக்குள் வந்தது.
நன்னிலம்
நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவி்ட்டபடி சென்றனர்.திருவாரூர் மாவட்டம் முழுவதும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது. நேற்று மாவட்டம் முழுவதும் மழை பெய்யவில்லை.பனிப்பொழிவின் காரணமாக கிராமத்தின் உட்புற சாலைகளிலும் வயல்வெளிகளிலும் பனி அடர்ந்து காணப்பட்டது.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆண்டிப்பந்தல் நல்லமாங்குடி, சுரக்குடி, மகிழஞ்சேரி, குவளைக்கால் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது .
மன்னார்குடி
மன்னார்குடி பகுதியில் தற்போது பனிப்பொழிவும் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக உள்ளது. நேற்று காலை 9 மணி வரை நீடித்த பனிப்பொழிவால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. இந்த கடும் பனிப்பொழிவால் விவசாய பயிர்களான உளுந்து, கடலை போன்ற செடிகளின் பூக்கள் பாதிக்கப்படுவதால் விளைச்சலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கடும் பனிப்பொழிவால் மற்ற பயிர்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.