< Back
மாநில செய்திகள்
காரைக்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு

தினத்தந்தி
|
7 Dec 2022 12:15 AM IST

காரைக்குடி பகுதியில் நேற்று காலை 11 மணி வரை கடுமையான பனிப்பொழிவு இருந்ததால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

காரைக்குடி

காரைக்குடி பகுதியில் நேற்று காலை 11 மணி வரை கடுமையான பனிப்பொழிவு இருந்ததால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கடும் பனிப்பொழிவு

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி மறுகால் செல்கிறது. பொதுவாக ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, கல்லல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு தொடக்கத்தில் மிதமான நிலையில் இருந்தது. அடுத்து படிப்படியாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

வாகன ஓட்டிகள் அவதி

கடந்த சில தினங்களாக இரவு 7 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு விடிய, விடிய கடுமையாக உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிற்குள் முடங்கிய நிலையில் உள்ளனர். நேற்று வழக்கம் போல் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் நேற்று காலை 6 மணி முதல் 11 வரை கடுமையான பனிப்பொழிவாக இருந்தது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுரை சாலையில் காலை 11 மணி வரை கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது. இதனால் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் மிதமான வேகத்தில் வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றது.

மேலும் செய்திகள்