கடலூர்
கடலூரில் கடும் பனி மூட்டம்
|கடலூரில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகு கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதற்கு மாறாக இரவில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இரவு 9 மணிக்கெல்லாம் பனி விழ தொடங்குகிறது. இந்த பனிப்பொழிவின் தாக்கம் காலை 8 மணி வரை நீடிக்கிறது.
பொதுவாக மழைக்காலங்களில் காலை 7 மணிக்கு பிறகுதான் சூரிய உதயத்தை காணமுடியும். ஆனால் கடலூரில் நேற்று காலை சுமார் 8 மணி வரை சூரியனை காண முடியவில்லை. 10 அடி தூரத்திற்குள் நிற்கும் நபரையோ, எந்த ஒரு பொருளையும் காண முடியாத நிலை ஏற்பட்டது.
பனி மூட்டம்
கடலூர் நகரில் உள்ள வீடுகள் அனைத்தும் பனிப்போர்வையால் மூடப்பட்டது போல் பனி சூழ்ந்து காட்சி அளித்தது. வீடுகளின் தாழ்வாரங்களில் மழைநீர் போல் தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்ததையும் காண முடிந்தது. இந்த பனிமூட்டத்தினால் கடலூர்-சிதம்பரம் நெடுஞ்சாலை, கடலூர்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் சென்ற சில வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் சரியாக எரியாததால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு பனி விலகிய பின்னரே புறப்பட்டு சென்றனர். மேலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றனர். அந்த அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது. காலை 8 மணிக்கு மேல் தான் சூரிய ஒளி பரவ தொடங்கியது. அதன் பின்னரே பனிமூட்டம் மறைந்து இயல்பான நிலைக்கு கடலூர் நகரம் திரும்பியது. மேலும் வாட்டி வதைத்த கடும் குளிரால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.