செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
|மாமல்லபுரத்தில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.
கடல் சீற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று லேசான மழை பெய்தது. கடல் வழக்கத்திற்கு மாறாக நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 15 மீட்டர் தூர கரை பகுதி வரை ராட்சத அலைகள் சீறி எழும்பி வந்தன. நேற்று ராட்சத அலையால் கடல் நீர் முன்னோக்கி வந்ததால் அங்குள்ள கடற்கரை உணவகம், குடியிருப்பு பகுதிகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது.
குறிப்பாக மீனவர் கிராமத்தின் வடக்கு பகுதியில் கற்கள் கொட்டி கடல் நீர் வரத்தை தடுத்தும், கற்கள் தடுப்புகளை தாண்டி கடல் நீர் முன்னோக்கி வந்ததால் அந்த பகுதி மக்களும், மீனவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மீன் பிடிக்க செல்லவில்லை
குறிப்பாக ராட்சத அலைகள் கடற்கரை கோவிலின் வடக்கு பக்க கடற்கரை பகுதி வரை மணல் பரப்பில் சீறி எழும்பி வந்ததால் அந்த பகுதி மணல் பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு மழை நீரில் நிரம்பிய ஏரி, குளம் போல் அந்த பகுதி காட்சி அளித்தது.
மேலும் வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடா்ந்து நேற்று மாமல்லபுரம் மற்றும் கொக்கிலமேடு, வெண்புருஷம், நெம்மேலி குப்பம், சூளேரிக்காட்டு குப்பம், புதுஎடையூர் குப்பம், பட்டிபுலம் குப்பம், புது கல்பாக்கம் குப்பம், சட்ராஸ் குப்பம், மெய்யூர் குப்பம் உள்ளிட்ட மீனவ பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அந்த பகுதிகளில் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.