செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
|மாமல்லபுரத்தில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.
கடல் சீற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 10 மீட்டர் தூர கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் சீறி எழும்பி வந்தன. நேற்று ராட்சத அலையால் கடல்நீர் முன்னோக்கி வந்ததால் அங்குள்ள கடற்கரை உணவகம், குடியிருப்பு பகுதிகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது.
அங்கு கற்கள் கொட்டி கடல்நீர் வரத்தை தடுத்தும், கற்கள் தடுப்புகளை தாண்டி கடல்நீர் முன்னோக்கி வந்ததால் அந்த பகுதி மக்களும், மீனவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக ராட்சத அலைகள் கடற்கரை கோவிலின் வடக்கு பக்க கடற்கரை பகுதி வரை மணற்பரப்பில் சீறி எழும்பி வந்ததால் அந்த பகுதி மணற்பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு மழை நீரில் நிரம்பிய ஏரி, குளம் போல் அந்த பகுதி காட்சி அளித்தது.
மேலும் ராட்சத அலையில் மீன்பிடி வலைகள் அடித்து செல்லாமல் இருக்க கரைப்பகுதியில் இருந்த மீன்பிடி வலைகள், துடுப்பு, மீன்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் டிரம், படகு என்ஜின் போன்ற மீன்பிடி சாதனங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்தி வைத்தனர்.
கோரிக்கை
அதேபோல் படகுகளையும் ராட்சத அலைகள் வராத வகையில் கடற்கரையில் இருந்து 20 மீட்டர் தூரம் உள்ள நீண்ட மணற்பகுதி உள்ள இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். கடல் சீற்றத்தால் மணற்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்ட காரணத்தால் காலை நேரத்தில் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சிலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
கடல் சீற்றம் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கரைப்பகுதியில் படகு, வலை, போன்ற மீன்பிடி சாதனங்களை பாதுகாக்க முடியவில்லை என கவலை தெரிவிக்கும் மீனவர்கள், தமிழக அரசு மாமல்லபுரம் மீனவர் பகுதி கடற்கரை முழுவதும் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.