< Back
மாநில செய்திகள்
இடி-மின்னலுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு
மாநில செய்திகள்

இடி-மின்னலுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு

தினத்தந்தி
|
14 July 2023 3:19 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேைவ பாதிக்கப்பட்டது. ஜெர்மன் விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

மீனம்பாக்கம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 342 பயணிகளுடன் நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக விமானம் வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளித்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஜெர்மன் விமானத்தை பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பினார்கள்.

வானில் வட்டமிட்டன

அதேபோல் பாரீசில் இருந்து 286 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், சிங்கப்பூரில் இருந்து 269 பயணிகளுடன் வந்த விமானம், மற்றும் மலேசியா, திருச்சி, லண்டன் உள்பட 8 விமானங்கள் சென்னையில் தரைஇறங்க முடியாமல் சுமார் அரை மணிநேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை வானில் வட்டமடித்தன.

அதன்பிறகு மழை ஓய்ந்ததும் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த 8 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக தரைஇறங்கின. பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஜெர்மன் விமானமும் அதிகாலை 2.50 மணிக்கு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கியது.

தாமதம்

மேலும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், பாங்காக், ஹாங்காங், சிங்கப்பூர், பாரீஸ், பிராங்க்பார்ட், இலங்கை உள்ளிட்ட 12 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

நள்ளிரவில் பெய்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

மேலும் செய்திகள்