தமிழ்நாட்டில் கனமழைக்கு 11 பேர் பலி
|தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 4 நாட்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய உள்ள கோடை காலத்தில் 12.5 செ.மீ. மழை இயல்பாக கிடைக்கப்பெறும். இந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை 9.63 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 சதவீதம் குறைவாகும். இன்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் சராசரியாக 1.77 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 7.12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாகவும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. அதன்படி, கடலூரில் மின்னல் தாக்கி ஒருவரும், கன்னியாகுமரியில் திடீர் வெள்ளப்பெருக்கினால் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மொத்தம் 11 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 24 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. நிவாரண முகாம்களில் 469 பேர் தங்க வைக்கப்பட்டனர். மேலும், கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் 24-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 23-ந்தேதிக்குள் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். எனவே, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி பேரின் செல்போன்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டது.
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் கன்னியாகுமரி, கோவை, நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள், கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.