< Back
மாநில செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு
மாநில செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தினத்தந்தி
|
13 July 2024 5:09 PM IST

சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது.

நெல்லை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணை பகுதிகளிலும் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று பகலில் சுமார் 350 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் இன்று காலை 2649 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 102 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று காலை 104.10 அடியாக இருக்கிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 113 அடியாக இருந்த நிலையில் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர் மட்டம் 2 அடி அதிகரித்து 40 அடியாக உள்ளது.

மேலும் செய்திகள்