< Back
மாநில செய்திகள்
குமரியில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

தினத்தந்தி
|
1 May 2023 11:14 PM IST

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளிலும், மலையோர பகுதிகளில் மட்டுமே இந்த மழை காணப்பட்டது. அதே சமயம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மட்டும் பெய்தது.

இந்த நிலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. முன்னதாக பகல் முழுவதுமே வானில் கருமேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறிகள் காணப்பட்டன. பின்னர் 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாகவே சுமார் ஒரு மணி நேரம் வரை பெய்து கொண்டிருந்தது. அதன்பிறகு 8.30 மணிக்கு பிறகு பலத்த மழையாக மாறியது. இந்த பலத்த மழை வெகு நேரம் வரை பெய்து கொண்டே இருந்தது.

சாலைகளில் தண்ணீர்

மழை தொடர்ந்து பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வகையில் செம்மாங்குடி ரோடு, கேப் ரோடு, கே.பி. ரோடு, ஆராட்டு ரோடு, கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சுமார் 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. பின்னர் மழை ஓய்ந்த பிறகு மெல்ல மெல்ல வடிந்தோடியது.

தக்கலை

தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவியது. தண்ணீர் குறைவாக காணப்பட்ட வள்ளியாறில் நேற்று பெய்த மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுபோல் நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப்பகுதிகள் மற்றும் திற்பரப்பு, குலசேகரம், திருநந்திக்கரை, பொன்மனை, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

வீட்டின் மீது மரக்கிளைகள் விழுந்தன

மழையின் போது ஏற்பட்ட காற்றினால் பல இடங்களில் ரப்பர் உள்பட பல்வேறு மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. குலசேகரம் அருகே தும்பகோடு பகுதியில் கால்வாய் கரையோரம் உலர்ந்த நிலையில் நிற்கும் மரத்தின் கிளைகள் அந்த பகுதியில் உள்ள ஜான் மற்றும் லதா ஆகியோரின் வீட்டுச் சுற்றுச்சுவர்கள் மீது ஒடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

இதே போல், மார்த்தாண்டம், கொட்டாரம், சாமிதோப்பு, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகள், மலையோர பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மேலும் செய்திகள்