< Back
மாநில செய்திகள்
கனமழை, வெள்ள பாதிப்பு: 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கனமழை, வெள்ள பாதிப்பு: 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தினத்தந்தி
|
4 Aug 2022 12:16 PM IST

தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அந்த அணைகள் நிரம்பி உள்ளதால் இவ்விரு அணையில் இருந்தும் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை விநாடிக்கு 2 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர் மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள், வெள்ளம் அதிகம் பாதிக்கும் இடங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்