தொடரும் கன மழை: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
|கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கோவை,
கோவையில் கடந்த 1 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் செல்ல வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.
கோவை குற்றாலம் மட்டுமின்றி, வைதேகி பால்ஸ், பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதால், நொய்யலிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நொய்யலில் கரைபுரண்டு ஓடும் மழை வெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
பேரூர் படித்துறையை மூழ்கியபடி செல்லும் நொய்யல் ஆற்று தண்ணீரை தடுப்பணைகளில் இருந்து குளங்களுக்கு பிரித்து அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக கோவை குளங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது,
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக நொய்யலில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையாக சித்திரைச்சாவடி உள்ளது. இந்த தடுப்பணைக்கு நொய்யலில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றார்.