< Back
மாநில செய்திகள்
கொட்டித்தீர்த்த கன மழைஈரோட்டில் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
ஈரோடு
மாநில செய்திகள்

கொட்டித்தீர்த்த கன மழைஈரோட்டில் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

தினத்தந்தி
|
16 Oct 2023 7:18 AM IST

கொட்டித்தீர்த்த கன மழையால் ஈரோட்டில் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

ஈரோட்டில் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அதிகபட்சமாக பவானியில் 111.6 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இடி-மின்னலுடன் மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் பரவலாக மழையும் பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் ஈரோடு மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.

பின்னர் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு மாநகரில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இயல்புவாழ்க்கை பாதிப்பு

இந்த நிலையில் நேற்று அதிகாலை பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள பிச்ைசக்காரன் பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள தரைமட்ட பாலம் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் அங்குள்ள ரோட்டில் 2 அடிக்கு மேல் தண்ணீர் ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பி.பி.அக்ரஹாரம் மல்லி நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பாத்திரம் மூலம் தண்ணீரை இரைத்து வெளியில் ஊற்றினார்கள். இந்த மழையால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இதேபோல் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்தியா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

மழை அளவு

இதேபோல் மாநகரின் சுற்றுப்புற பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாகவும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது. பவானியில் அதிகபட்சமாக 111.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பவானி-111.60, பெருந்துறை-96, சத்தியமங்கலம்-59, கொடுமுடி-56, கவுந்தப்பாடி-55.60, வரட்டுப்பள்ளம்-51.30, கொடிவேரி-40, பவானிசாகர்-29.20, கோபி 26.20, அம்மாபேட்டை-25.20, எலந்தகுட்டைமேடு-23, குண்டேரிப்பள்ளம்-20, மொடக்குறிச்சி-19, ஈரோடு-17, சென்னிமலை-7, தாளவாடி-2, நம்பியூர்-2.

மேலும் செய்திகள்