தஞ்சையில் இடியுடன் கனமழை; வாகன ஓட்டிகள் அவதி
|தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடைகாலத்தில் வெயில் கொளுத்துவதை போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடைகாலத்தில் வெயில் கொளுத்துவதை போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி சென்றாலும் வெயிலின் வெப்பத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
வெப்பத்தை தணிக்க மழை பெய்யுமா? என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. நேற்றுகாலை முதல் மாலை வரை தஞ்சையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
மாலையில் கருமேகங்கள் திரண்டு வந்தனர். திடீரென குளிர்ந்த காற்று வீசியதுடன் லேசாக மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சிறிதுநேரத்தில் நின்றுவிட்டது. பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் கனமழையாக பெய்தது. அவ்வப்போது மின்னல் வெட்டியதுடன் இடியும் இடித்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் காணப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் குழிகள் இருப்பது தெரியாமல் வாகனங்களை ஓட்டி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த மழையின் காரணமாக பூமி குளிர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.