< Back
மாநில செய்திகள்
வேலூரில் இடி,மின்னலுடன் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
மாநில செய்திகள்

வேலூரில் இடி,மின்னலுடன் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
31 July 2022 8:19 PM IST

வேலூரில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர்,

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக காலை 10 மணிக்கே உச்சி வெயிலை போன்று வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

மதியம் 12 மணியளவில் கடந்த சில நாட்களில் இல்லாத வகையில் வெயிலின் அனல் அதிகளவு காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க மழை பெய்யாதா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மாலை 5 மணியளவில் வானில் கருமேகங்கள் திடீரென திரண்டன. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் 5.15 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிதுநேரம் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. அதன்பின்னர் திடீரென மழையின் வேகம் அதிகரித்தது.

தொடர்ந்து இடி, மின்னலுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், பொதுமக்கள் பலர் குடைபிடித்தப்படி சென்றதை காண முடிந்தது.

வேலூர் சம்பத் நகரில் குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கியது. சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டி தீர்த்த திடீர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்