< Back
மாநில செய்திகள்
இடி, மின்னலுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு - 2 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன
மாநில செய்திகள்

இடி, மின்னலுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு - 2 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன

தினத்தந்தி
|
15 Aug 2023 2:10 PM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் 25 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. அதில் 2 விமானங்கள் பெங்களூரு திருப்பிவிடப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சார்ஜா, துபாய் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 2 விமானங்கள், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்தன. பின்னர் 2 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. மழை ஓய்ந்ததும் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்ட 2 விமானங்களும் மீண்டும் சென்னை திரும்பி வந்தன.

அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பாங்காக், துபாய், மும்பை, பாரீஸ், தோகா, ஐதராபாத் உள்ளிட்ட 10 விமானங்கள் 15 நிமிடங்களில் இருந்து அரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதேபோல் நேற்று மாலை 3 மணி அளவிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் திருச்சி, மைசூர், கொச்சி, வாரணாசி, பாட்னா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 5 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்து கொண்டு இருந்தன. மழை ஓய்ந்ததும் வானில் வட்டமடித்து கொண்டிருந்த 5 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின.

அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ஐதராபாத், டெல்லி, மதுரை, கவுகாத்தி உள்ளிட்ட 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை 25 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்