ராமநாதபுரம்
மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததால் இருளில் மூழ்கிய கிராமங்கள்
|திருவாடானை பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் மின்கம்பிகள் அறுந்து, பல்வேறு கிராமங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு இருளில் மூழ்கின.
தொண்டி,
திருவாடானை பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் மின்கம்பிகள் அறுந்து, பல்வேறு கிராமங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு இருளில் மூழ்கின.
இடி, மின்னலுடன் கனமழை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
திருவாடானை தாலுகா பகுதிகளில் பரவலாக 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.
பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. மின் கம்பங்களும் முறிந்து விழுந்ததால், மின்கம்பிகள் அறுந்து சேதம் அடைந்தன.
மின்கம்பங்கள் சேதம்
இதனால் இரவு முழுவதும் திருவாடானை சுற்று வட்டார கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு, இருளில் மூழ்கின..
திருவாடானையில் 45.20 மில்லி மீட்டரும், தொண்டியில் 50.56 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
மின்வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.
மரங்கள் அகற்றம்
சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அதிகாரிகள் அகற்றினர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொது சுகாதார பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டனர். மின்கம்பம் விழுந்த பகுதிகளை தாசில்தார் தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, செந்தாமரை செல்வி மற்றும் திருவாடானை யூனியன் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மக்கள் மகிழ்ச்சி
இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தின் வேறு சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரத்தில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.