வேலூர்
இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை
|வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இடி, மின்னலுடன் பலத்த மழை
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கான அறிகுறியுடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் காலை வெயிலின் தாக்கம் காணப்பட்டது. மதியம் 1 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. முதலில் லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. சிறிதுநேரத்துக்கு பின்னர் மழையின் வேகம் அதிகரித்தது. இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
சாலையில் தேங்கிய மழைநீர்
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் மழையில் நனைந்தும், பொதுமக்கள் குடை பிடித்தபடியும், மழைகோட் அணிந்தும் சென்றனர். வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் பாதாள சாக்கடை, சாலை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அதனால் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதேபோன்று சேண்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில்தெரு, கன்சால்பேட்டை, இந்திராநகர், தோட்டப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழை காரணமாக இரவில் குளிர்ந்த காற்றும், குளிர்ச்சியான சீதோஷண நிலையும் காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.