திருவள்ளூர்
திருத்தணி, ஆர்.கே.பேட்டையில் சூறைக்காற்றுடன் கனமழை - சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
|திருத்தணி, ஆர்.கே.பேட்டையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் நெடுஞ்சாலையோரம் இருந்த 3 மரங்கள் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், ஆர்.கே. பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் வாட்டி வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதாலும், இரவில் கடும் புழுக்கத்தாலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம் காரணமாக மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருத்தணியில் நேற்று காலை முதலே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென ஒரு மணிநேரம் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
சூறைக்காற்றில் திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அகூர், கோரமங்கலம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் இருந்த 50 ஆண்டு பழமை வாய்ந்த மரங்கள் 3 வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. தகவல் அறிந்து திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்திருந்த மரங்களை அப்புறப்படுத்தினர். இதனால் திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் மாம்பாக்கம் கிராமத்தில் 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டையில் நேற்று காலை முதல் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பஸ்கள் அனைத்தும் குறைந்த பயணிகளுடன் ஓடியதை காண முடிந்தது.
இந்த நிலையில் மதியம் 3.30 மணி அளவில் திடீரென்று கரு மேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. பலத்த காற்று வீசியதில் ஆர்.கே. பேட்டை தாலுகா அலுவலகம் எதிரே உள்ள சாலையின் ஓரம் இருந்த மரம் ஒன்று வேருடன் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் ஆர்.கே. பேட்டை- சோளிங்கர் இடையே வாகன போக்குவரத்து தடைப்பட்டது. பலத்த மழை கொட்டியதால் அந்த மரத்தை உடனடியாக அகற்ற முடியவில்லை. பின்னர் மழை குறைந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.