< Back
மாநில செய்திகள்
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்
மாநில செய்திகள்

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்

தினத்தந்தி
|
18 Dec 2023 1:57 PM IST

நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது.

சென்னை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனிடையே, கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-

தற்போதைய கனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை. வளிமண்டல சுழற்சியே காரணம். ஆனால் வளிமண்டல சுழற்சியில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்தது இல்லை. அக்டோபர் 1 முதல் தற்போது வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்கிறது.

நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாளையங்கோட்டையில் அதி கனமழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் குமரிக்கடல், தென் மாவட்டம் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்