கனமழை எதிரொலி: சென்னையில் காய்கறிகள் சற்று விலை உயர்வு
|மழை ஓய்ந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒருசில பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
சென்னை,
'மிக்ஜம்' புயல் தாக்கத்தால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னையில் பிரதான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் கடல் போல் தேங்கியது. மிக்ஜம் புயல் ஓய்ந்தாலும், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில், கனமழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக ரூ.10 வரை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.55, தக்காளி ரூ.32, கத்தரிக்காய் ரூ.40, இஞ்சி ரூ.90, அவரை ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் காய்கறிகள் தட்டுப்பாடு இல்லை என்றும் ஓரிரு நாட்களில் வரத்து சீராகி காய்கறிகளின் விலை குறையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மழை வெள்ளத்தால் ஆவின் மற்றும் தனியார் பால் விற்பனை பெரும்பாலான இடங்களில் தடைபட்டது. நேற்றும் அதேநிலை நீடித்தது. இன்று பால் விநியோகம் சீரடைந்து வருகிறது.