< Back
மாநில செய்திகள்
நெல்லையில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!
மாநில செய்திகள்

நெல்லையில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!

தினத்தந்தி
|
30 Dec 2023 8:34 AM IST

அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை,

தென் மாவட்டங்களில் கடந்த 16, 17-ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்போது மீண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அத்துடன், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் ஏற்கெனவே பெய்த மழையின் காரணமாக நிரம்பியுள்ளது. இந்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்துவருவதாலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், அணைகளில் இருந்து தற்போது திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 3 அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், காட்டாற்று வெள்ளம் அனைத்தும் சேர்ந்து மொத்தம் 11 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நீர் வரத்து அதிகரித்தாலும், வெள்ள அபாய எச்சரிக்கை இல்லை என்றும், மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்