< Back
மாநில செய்திகள்
கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 31,000 கன அடியாக உயர்வு
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 31,000 கன அடியாக உயர்வு

தினத்தந்தி
|
9 Nov 2023 8:20 AM IST

பவனி சாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ஈரோடு,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணைக்கு வந்து அங்கிருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வனப்பகுதி வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

பவானி சாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 70.41 அடியாக உள்ளது. மேலும் அணையில் நீர் இருப்பு 11.1 டி.எம்.சி ஆக உள்ளது. நேற்று வரை அணைக்கு நீர் வரத்து 6,574 கன அடியாக இருந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 31,944 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்