< Back
மாநில செய்திகள்
கனமழை எதிரொலி: குமரியில் 3 குளங்கள் உடைந்தன -ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: குமரியில் 3 குளங்கள் உடைந்தன -ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
5 Oct 2023 4:59 AM IST

கனமழை எதிரொலியாக குமரி மாவட்டத்தில் 3 குளங்கள் உடைந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொட்டி தீர்த்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

முன்சிறை ஊராட்சிக்குட்பட்ட மங்காடுபகுதியில் இருந்து முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் துரத்திற்கு மழை நீர் தேங்கி குளம்போல காட்சி அளிக்கிறது. இதனால் சாலையின் இருபுறமும் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளம்

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறு, பழையாறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும், விளை நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் மழையால் 27 வீடுகள் இடிந்தன.

902 குளங்கள் நிரம்பின

இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதே சமயம் குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் 2,040 குளங்கள் உள்ளன. அதில் இதுவரை 902 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 1,102 குளங்கள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன. மற்ற குளங்களும் நிரம்பி வருகின்றன.

3 குளங்கள் உடைந்தன

இதில் தண்ணீர் வரத்து அதிகமானதால் நாவல்காடு பகுதியில் உள்ள நாடான்குளத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

அதாவது மறுகால் பாயும் பகுதியில் உள்ள இடத்தில் கரை உடைந்ததால் தண்ணீர் அதிகளவு வெளியேறியது. இந்த தண்ணீர் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் இருந்த பயிர்களை சுற்றிலும் தேங்கியது.

இதுதவிர கல்படி குளம் உள்பட மொத்தம் 3 குளங்கள் உடைந்துள்ளன.

கனமழையால் மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 13½ அடி உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 110 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்