< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் கொட்டி தீர்த்த பலத்த மழை; சாலையோரம் தேங்கிய தண்ணீர்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் கொட்டி தீர்த்த பலத்த மழை; சாலையோரம் தேங்கிய தண்ணீர்

தினத்தந்தி
|
4 Sept 2023 3:43 AM IST

ஈரோட்டில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால், சாலையோரம் தண்ணீர் தேங்கி நின்றது.

ஈரோட்டில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால், சாலையோரம் தண்ணீர் தேங்கி நின்றது.

பலத்த மழை

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 5 மணிஅளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சில நிமிடங்கள் பெய்த மழை, பிறகு தூறிக்கொண்டே இருந்தது. இரவு 8 மணிஅளவில் மீண்டும் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.

ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், திருநகர்காலனி, மரப்பாலம், பன்னீர்செல்வம் பூங்கா, இடையன்காட்டுவலசு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, பெரியவலசு, ஆசிரியர் காலனி, சூரம்பட்டி, காளைமாட்டுசிலை, கொல்லம்பாளையம், நாடார்மேடு உள்பட மாநகர் பகுதி முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

பெரிய பள்ளம்

ஆங்காங்கே சாலையோரங்களில் மழைநீர் குளமாக தேங்கி நின்றது. இதனால் நடந்து சென்றவர்கள் சிரமம் அடைந்தனர். ஈரோடு காந்திஜிரோடு அம்மா உணவகம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. அதன்பிறகு அங்கு சாலை சீரமைக்கப்படாததால், நடுரோட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பெரிய பள்ளம் உருவாகி இருப்பதால் நேற்று பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கி இருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கொங்கலம்மன் கோவில் வீதி, நேதாஜிரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமானோர் மழையில் நனைந்தபடி சென்றனர். தொடர்ந்து இரவில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்