தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
|தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் வலுவிழந்தது.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. பின்னர், வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் மழையின் தீவிரமும் சற்று குறைந்தது. இதையடுத்து, கடந்த மாதம் 30ம் தேதி, வரும் டிசம்பர் 5ம் தேதி அன்று அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்எதிரொலியால், தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.