< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் வரும் 25, 26ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 25, 26ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
23 Dec 2022 9:16 AM IST

தமிழகத்தில் வரும் 25, 26ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாகையில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் தெற்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

இதன்காரணமாக நேற்று (22.12.2022 முதல் 24.12.2022) வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இதன் காரணமாக

25.12.2022:- அன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

26.12.2022:- அன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்