< Back
மாநில செய்திகள்
நீலகிரி, தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
மாநில செய்திகள்

நீலகிரி, தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
4 Jan 2024 5:53 AM IST

வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். ஆனால் நடப்பாண்டு இந்த மாதம் வரை பருவமழை நீடிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். ஆனால் நடப்பாண்டு இந்த மாதம் வரை பருவமழை நீடிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும் பருவமழை கணக்கின்படி, நடப்பாண்டில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பை விட 4 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருந்தது. இந்த நிலையில் பருவமழை இம்மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்தபடி, தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்றும், நீலகிரியில் நாளையும் (வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், கன்னியாகுமரி சிவலோகம் 2 செ.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சிற்றாறு, ராமநதி அணைப் பகுதி, மாஞ்சோலை, பேச்சிப்பாறை, ஊத்து தலா 1 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

மேலும் செய்திகள்