< Back
மாநில செய்திகள்
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Aug 2023 7:59 AM IST

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும், 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்திருந்தாலும், இன்னும் அதன் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த வாரம் வரை தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலே வாட்டி வதைத்தது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி , தஞ்சாவூர், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கனமழை பெய்யும் இடங்கள்

நாளை (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், 'கோடம்பாக்கம் 7 செ.மீ., வானகரம், அண்ணாநகர், அம்பத்தூர் தலா 6 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், புழல் தலா 5 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், திருவாலங்காடு, அயனாவரம் தாலுகா அலுவலகம், ஐஸ்அவுஸ், கொளத்தூர், ஆவடி, அடையார் சுற்றுச்சூழல் பூங்கா, பூந்தமல்லி, நந்தனம் தலா 4 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது

மேலும் செய்திகள்